திருப்பூர்: தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் ஒன்றான திருப்பூர் மாவட்டம், பனியன் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. தொழில் துறையில் மிகுந்த வேகமாக வளர்ந்து வரும் இம்மாவட்டம், லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த மாவட்டம் ஆகும்.
"ஆள் பாதி, ஆடை பாதி" என்ற கூற்றுக்கு இணங்க, மனிதனின் மதிப்பு ஆடையில் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என கோலோச்சி வந்தது. அன்னிய செலாவணியை அதிக அளவில் ஈடு தரும் மாவட்டமாகவும் விளங்கியது.
குஜராத், மும்பை, டெல்லி, கொல்கத்தா என உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் திருப்பூரிலிருந்து பனியன் ஆடைகள் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் திருப்பூரில் பருத்தி உற்பத்தி அதிக அளவிலிருந்ததால், அதனைக் கொண்டு காட்டன் பனியன் ஆடைகள் தயாரிப்பது வெகு சுலபமாக இருந்தது.
எனவே, அதனை பயன்படுத்திய திருப்பூர் தொழில் முனைவோர், பனியன் தொழிலை வளர்த்து 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக மாற்றினர். ஆனால், இன்று நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால், காட்டன் ஆடைகளின் விலை உயர்ந்துள்ளது. எனவே, குஜராத்தில் இருந்து பாலியஸ்டர் துணிகள் வரவழைத்து ஆடை தயாரிக்க வேண்டிய சூழல் உள்ளது.