திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இங்கு நூல் தட்டுப்பாடு காரணமாக, கடந்த மூன்று மாதங்களில் 70 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பின்னலாடைத்துறை மற்றும் அவை சார்ந்த தொழில்கள் கடும் நஷ்டமடைந்து வருகின்றன.
முன்னதாக, பெறப்பட்ட ஆர்டர்களின் விலையைவிட, உற்பத்திச்செலவு அதிகம் பிடிப்பதாகவும்; இதனால் சீனா, பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகளுடன் விலையில் போட்டியிட முடியாமல் ஆர்டர்களை இழந்து வருவதாகவும் தெரிகிறது.
இதில், நூல் விலை உயர்வு என்பது 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னை சார்ந்தது என்பதால், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், டீமா, சைமா, நிட்மா என அனைத்து பின்னலாடை சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று(மார்ச் 15) முழு வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
நூல் விலை உயர்வைக் கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம் இதனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக 200 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மாநகராட்சி முதல் ரயில் நிலையம் வரை பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், வேட்பு மனு தாக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடப்பதால் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையம் முன்பு 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், டீமா, சைமா, நிட்மா என அனைத்து பனியன் துறை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், திருப்பூர் வடக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணி, திருப்பூர் தெற்கு திமுக வேட்பாளர் க.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவளித்தனர்.
இதையும் படிங்க:ELECTION UPDATES: வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர்!