திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, ஆறாண்டுக்குப் பின்னர் தான் நீதித்துறையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்டவை தொடங்கப்பட்டன. ஆனால், இதற்கான உரிய கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி எதுவுமில்லை. பனியன் நிறுவனம் செயல்பட்டு வந்த குறுகலான பகுதிக்குள், குறுகிய கட்டடத்தில் இவை இயங்கி வருகின்றன.
ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை அடுத்து, கடந்தாண்டு 2018 ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் பின்புறம், 10 ஏக்கர் நிலம், மாவட்ட நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 37 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது.
நீதிமன்ற கட்டடம் ரூபாய் 37 கோடி மதிப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், 1 லட்சத்து 66 ஆயிரத்து, 441 சதுரடி பரப்பில் அமைகிறது. நீதிமன்றம், இரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆகிய மூன்று மாவட்ட நீதிமன்றங்கள், முதன்மை குற்றவியல் நீதிமன்றம், நான்கு ஜே.எம்., நீதிமன்றம் என எட்டு நீதிமன்றங்கள் அமைகிறது.