தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை" - சி.பி.ராதாகிருஷ்ணன்! - Governor CP Radhakrishnan byte

Jharkhand Governor CP Radhakrishnan byte: மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பகம் சார்பில் நடைபெற்ற மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
நிகழ்ச்சியில் பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 11:18 AM IST

நிகழ்ச்சியில் பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

திருப்பூர்:மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பகம் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக, மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானிய ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவை குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று (செப். 2) திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் இந்திய அஞ்சல் துறை, பிரதமரின் மக்கள் மருந்தகம், கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட சமூக நல அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த அரங்குகளை பார்வையிட்ட ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானிய ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கூடுதல் ஆர்வமுடன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, "மக்கள் சேவையில் மகத்தான 9 ஆண்டுகள் - திட்டங்களும், சாதனைகளும்" என்ற இரு குறிப்பேடுகளை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

மேலும் கல்லூரி மாணவியர்களுக்கு, சந்திராயன் வெற்றி குறித்த காணொலியை ஒளிப்பரப்பு செய்தனர். அதனையடுத்து மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை பேசினார். அப்போது பேசிய அவர், "ஒரு பெண் கருவுற்று குழந்தை பெற்று, அந்தக் குழந்தை பள்ளிக்கு செல்லும் பொழுது துவங்கி, வாழ்க்கையின் அனைத்து காலகட்டத்திலும் ஏற்படுகின்ற தேவைகளுக்கு பயன் அளிக்கும் வகையில், ஏராளமான மத்திய அரசின் நலத்திட்டங்கள் உள்ளன. அவைகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

அவரை தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசினார். அவர் பேசுகையில், "பாரத பிரதமரின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை இந்தியா நிகழ்த்தி உள்ளது. அதில் மிக முக்கியமாக மற்ற நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் அளவில், சந்திராயன் 3 விண்கலத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால்பதித்தது.

நான் எனது வாழ்நாளில் எத்தனையோ பிரதமர்களை மிக நெருக்கத்திலும், தூரத்தில் இருந்தும் சந்தித்து உள்ளேன். ஆனால் அத்தனை பிரதமர்களைவிடவும் பிரதமர் மோடி மிகச் சிறந்த ஆளுமை உள்ளவராக இருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த காலத்தில் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பூசிகள் இந்தியாவிற்கு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஆனால் தற்போது பிரதமர் மோடியின் ஆட்சியில் கரோனா தடுப்பூசியை இந்தியா தயாரித்து, மற்ற நாடுகளுக்கும் கொடுத்து உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வருடத்தை சிறுதானிய ஆண்டாக அறிவிப்பதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே. உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறுதானிய ஆண்டு கொண்டாடப்படுகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டம் துவங்கிய போது அதை அனைவரும் ஏளனம் செய்தனர்.

ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மிகவும் தூய்மையாக இருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடி மட்டுமே. பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி நாம் முதலிடத்தில் வரக்கூடிய நாளும் வெகு தூரத்தில் இல்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:"லஞ்சத்தை கட்டுப்படுத்துங்க ஐயா" - திருப்பூர் கலெக்டரிடம் கதறிய விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details