குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஐக்கிய சுன்னத் ஜமாத் மற்றும் ஜமாஅத் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகை முடிந்த பின்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காங்கயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் பெரிய பள்ளிவாசல் கோம்பை தோட்டம் மற்றும் பெரிய தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 10 பள்ளிவாசல்கள் சேர்ந்த இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்து ஒரே இடத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல காவல் துறை அனுமதிக்காமல் பாதுகாப்பு அளித்து வந்தனர். அப்போது காவல் துறையினரின் அனுமதியை மீறி சிவசேனா அமைப்பைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் அவ்வழியே தனது காரை ஓட்டி வந்ததோடு, போராட்டத்தை வீடியோவும் எடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர் அமைப்பினர், சாலையோரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்த ஹெல்மெட்டுகளை எடுத்து காரில் வீசியதில் காரின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் முன்புற கண்ணாடிகள் சேதமடைந்தன.