குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றைச் செயல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் தொடர் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரிலும் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் செல்லாண்டியம்மன் படித்துறை அறிவொளி சாலையில் தொடர்ச்சியாக 26ஆவது நாளாக நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட இஸ்லாமியர்கள் திரளாகப் பங்கேற்றனர். இந்நிலையில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இஸ்லாமிய பொதுமக்கள் இன்று மாலை மாநகராட்சி அலுவலகச் சந்திப்புப் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.