திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கம் சார்பாக கடந்த 24-ஆம் தேதி மாநில அளவிலான களரி போட்டி நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வீரமும், சாகசமும் நிறைந்த இக்கலையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கம் தமிழகம் முழுவதும் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அந்த மாணவர்கள் மெய்பயட்டு, சுவாடுகள், உருமி, ஹை கிக், ஸ்வார்ட் அண்ட் சீல்ட் ஆகிய 5 பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் அதீத திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். தொடர்ந்து அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், 7 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இதையும் படிங்க:நெல்லையில் புலி என்ற வார்த்தை பொறித்த மண்பானை ஓடு கண்டுபிடிப்பு!
குறிப்பாக, ஸ்ரீனிவாசன், தமோஹரா, த்யான், அதிரா, ஈஷா, சுவாமி மஹன்யாஸ், சுவாமி மிதுன் ஆகிய மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.