நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 52 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 937ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் வருகிற 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், சேலம் மாநகராட்சிகளில் இன்றுவரை (28-04-2020) முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை மீறி பொதுமக்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாநகர் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களின் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.