திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பணிக்கம்பட்டி கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் பல்லடம் ரோட்டரி கிளப்பின் பங்களிப்புடன் மின்மயானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக இப்பணி நடைபெற்று வரும் நிலையில், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் பேரில் மின்மயான கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பணிகள் நிறுத்தப்பட்டதிற்கு ஆளுங்கட்சி தலையிட்டு இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே இது குறித்து பல முறை பொதுமக்கள் ஆட்சியரிடம் மனுகொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பின் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இருப்பினும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையடுத்து இன்று காலை முதலே வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தினசரி சந்தை அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த முழு கடை அடைப்பின் போது பேருந்துக்கள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கின.
வியாபரிகள் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்