திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியானதால், வட மாநில ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பலரும் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்கின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி உள்ளிட்டப் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு நிறுவன உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று(மார்ச்.1) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் எஸ்.பி. சசாங் சாய், "திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பரவுவது போல வட மாநிலத் தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அதிகமாக மூன்று வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒரு வீடியோ திருப்பூரில் ஜனவரி மாதத்தில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக பரவியது. அந்த வீடியோவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு வீடியோக்கள் வேறு பகுதியில் நடந்தது, அவை திருப்பூரில் நடந்தது போல பரப்பப்பட்டு வருகிறது.