கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில் கடந்த எட்டாம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிஅளித்து.
இதையடுத்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் கோயில்களின் முன்பு ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை உடனடியாக திறக்கக்கோரியும், அரசைக் கண்டித்தும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் திருப்பூர் பெருமாள் கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் இடம் கோயில் மட்டுமே. கோயில்களை திறக்காவிடில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக படுதோல்வி அடையும் என எச்சரித்தார்.