திருப்பூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று வழிபாடு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அனைவருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்திக்கு குரல் கொடுத்த பாஜக மாநில தலைவர் எர். முருகன், கொங்கு பேரவை மாநில தலைவர் ஈஸ்வரன், மடாதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் இந்து முன்னணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், அகில இந்திய சமத்துவ மக்கள் தலைவர் சரத்குமார் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திராவிட பாரம்பரியத்தில் வந்தவரான திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
நக்சலைட் சிந்தனையுள்ள அலுவலர்கள் தவறான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்து பல்வேறு இடையூறுகளை கொடுத்தனர்.
இந்து முன்னணி கடுமையான போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம்.
கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் விநாயகர் சிலை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு மாறாக தமிழ்நாடு அரசு முடிவை எடுத்துள்ளது. இதனை அரசு உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் ஒன்றியம் வாரியாக இந்துக்கள் இந்த அரசு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வோம்.
கடவுள் எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என இந்து முன்னணி விரும்புகிறது. பல எதிர்ப்பு பிரச்சாரங்களை முறியடித்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இன்று மாலை நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். சட்டத்தை மதிப்போம்" என தெரிவித்தார்.