தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு ஆதரவாக ஜி.கே வாசன் பரப்புரை - election news

திருப்பூர்: மக்களவைத் தேர்தலில் உங்களை ஏமாற்றிய திமுகவை ஏமாளியாக்குங்கள் எனத் தெரிவித்து அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் பரப்புரை மேற்கொண்டார்.

Gk vaasan campaign
பல்லடத்தில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு ஆதரவாக ஜி.கே வாசன் பரப்புரை:

By

Published : Mar 29, 2021, 7:33 AM IST

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கணபதிபாளையத்தில் நேற்று (மார்ச்.28) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “மத்திய, மாநில அரசுகளின் இணக்கத்தின் அடிப்படையில், இரு கட்சிகளும் இணைந்து பல்வேறு திட்டங்கள் வழங்கி உள்ளன. இந்தத் தொகுதியில் இருக்கிற மக்களுக்கு அனைத்து திட்டங்களும் முழுமையாக வந்து சேர வேண்டும். அதற்கு இந்த இரு அரசுகளுடைய பிரதிநிதியாக அந்தத் திட்டங்கள் எல்லாம் நகரம் முதல் கிராமம் வரை சென்று சேர நடவடிக்கை எடுக்கும் வேட்பாளர் தான் நம்முடைய எம்எஸ்எம் ஆனந்தன். இங்கே மகளிர் அதிகமாக இருக்கிறீர்கள்.

”தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை” என்று கூறுவோம். ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால் அந்தக் குடும்பம் கல்வியறிவு பெறும். குடும்பம் கல்வி அறிவு பெற்றால், சமுதாயமே கல்வி அறிவு பெறும். சமுதாயம் கல்வி அறிவு பெற்றால், நாடே கல்வி அறிவு பெற்றதாக அர்த்தம். பெண்களுடைய வளர்ச்சி நாட்டினுடைய வளர்ச்சி. ஒரு நாட்டினுடைய வளர்ச்சியின் முதுகெலும்பு மகளிர் என்று சொன்னால் மிகையாகாது.

புரட்சித்தலைவி அம்மா, அவர்களது ஆட்சியில் தொடர்ந்த மகளிர் திட்டங்கள் இன்று வரை தடம் புரளாமல் நடந்துகொண்டு இருப்பது மட்டுமல்லாமல், திட்டங்கள் மேலும் மேலும் கூடிக்கொண்டே இருக்கின்றன. இன்னும் பெருமையோடு கூற வேண்டும் என்றால் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் எடுத்துக் கொள்வோமேயானால், தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்களுக்கே அதிக திட்டங்கள் என்ற பெருமை அதிமுக அரசுக்கு உண்டு.

பெண்கள் அதிகமாக போகின்ற இடம் சமையலறை. சமயலறையிலே உங்களுக்கு சுமை குறைய வேண்டும் என்பதற்காக, வருடத்திற்கு விலையில்லா ஆறு சிலிண்டர்களை கொடுக்கக்கூடியது இந்த அரசு. சூரிய ஒளி அடுப்பை இந்த அரசு உங்களுக்கு கொடுக்கப் போகிறது. மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மகளிர் வாங்கிய கடனை ரத்து செய்கிறது. ஆறு பவுன் கடன் வைத்தால் அது ரத்தாகிறது. மக்களவைத் தேர்தலை நினைத்து பாருங்கள், திமுக உங்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியது. உங்களை ஏமாற்றியவர்களை இந்தத் தேர்தலில் நீங்கள் ஏமாளியாக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

காரணம் என்னவென்றால் அதிகாரமே இல்லாமல் அவர்கள் உங்களை முட்டாளாக்க வேண்டும் என்பதற்காக, தைரியமாக வடிகட்டிய பொய்யை உங்களிடம் கூறுகிறார்கள். மக்களவைத் தேர்தலில் ஆறு பவுன் நீங்கள் அடகு வைத்தால் மீட்டுக் கொடுக்க முடியும் என்று கூறினார்கள். இரண்டு வருடம் ஆகிறது அதை பற்றி வாய் திறக்காமல் இன்று வரை இருப்பதற்கு காரணம் பொய் சென்னதால்தான். இந்த அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அதிமுக அரசு அறிவித்திருக்கிறது. அந்தப் பலன் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. இதுதான் உண்மை நிலை. நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையின் அடிப்படையில் வாக்காளர்கள் தொடர் வளர்ச்சிக்கு அதிமுகவுக்கு வாக்களியுங்கள். அத்தகைய நிலை ஏற்படுமேயானால் நிச்சயமாக உங்கள் வளர்ச்சி தடைபடாது.

வாக்காளர்களே, சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாக்கு பொல்லாதவர்களுக்கு போகக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஜாதி, மதம், மொழி, இனத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்தக் கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும் என்று கேட்கிறேன். சிறுபான்மை மக்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகள், திட்டங்கள் முறையாக கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இக்கூட்டணியின் நோக்கம். அதன் அடிப்படையிலேயே மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன்.

இதை எப்படியாவது மக்கள் மத்தியில் தவறாக எடுத்துச் சொல்லியும், ஒருவருக்கு ஒருவர் சண்டையை மூட்டியும் வேடிக்கை பார்த்து வாக்கு வாங்கலாம் என்று திமுக நினைக்கிறது. ஒற்றுமையை குலைக்க நினைக்கின்ற கூட்டணி திமுக கூட்டணி. ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது அதிமுக கூட்டணி. மதவாதமும் கிடையாது, மதச்சார்பின்மையும் கிடையாது. மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய மதநல்லிணக்கத்தை நாங்கள் விரும்புகிறோம்” எனப் பேசினார். மேலும் இப்பரப்புரையில் கூட்டணிக் கட்சிகளான பிஜேபி, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ஆ. ராசா பரப்புரைக்கு தடை கோரி புகார் மனு

ABOUT THE AUTHOR

...view details