திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 50ஆவது வார்டு வெள்ளியங்காடு, கே.எம்.நகர் பகுதியில் உள்ள பாறைகுழியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
மழைக்காலங்களில் மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் அவற்றை மூட வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் ஆறு மாத காலத்தில் மூடுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை நடத்திவந்த மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினர் மாநகராட்சி நிர்வாகத்தோடு பேசி உடனடியாகப் பாறைக்குழியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.