கேரளாவில் மழை பெய்துவருவதால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து இல்லாமல் அமராவதி அணை வறண்டு காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் மொத்தம் 90 அடியில், 25 அடிக்கும் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துவருவதால், அணையில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 28 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக உயர்ந்து 36 அடியாக உயர்ந்துள்ளது.
ஒருவாரத்திற்குள் அணையின் நீர்மட்டம் எட்டு அடிவரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 36.03 அடியாகவும், அணையின் நீர்வரத்து வினாடிக்கு 292 கன அடியாகவும் உள்ளன.