சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளம்வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்பு என்னென்ன என்பது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வு நடத்தினோம்.
எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள திருப்பூரில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் சுமார் 70 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
சில இளம் வாக்காளர்களை சந்தித்துப் பேசியதில் சமூக பிரச்னைகளுக்கு சுமூகத்தீர்வு காணும் கட்சியை மட்டுமே தேர்ந்தெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனர். தனியார் நிறுவன ஊழியர் கிருத்திகாவிடம் இதுகுறித்து கேட்டபோது, "பெண்கள் பாதுகாப்பே பிரதானம். எந்தக் கட்சி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறதோ அக்கட்சியே என் தேர்வு. முதல் வாக்கை வீணாக்க விடமாட்டேன்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.