திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் பவானிசாகர் அணை பாசனத்தின் மூலம் பயன்பெறும் கீழ்பவானி பாசனத்தில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
பாவனிசாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் திட்டுப்பாறை, மருதுறை, நத்தக்காடையூர், முத்தூர் மற்றும் மங்களப்பட்டி பகுதிகளில் 18 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகிறது.
மாவட்டத்தில் நத்தக்காடையூர் மற்றும் முத்தூர் பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் வரை பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததன் காரணமாக நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
நல்ல மழை பெய்த போதும் ஆட்கள் பற்றாக்குறை நிலவியதன் காரணமாக இந்த ஆண்டு குறைந்த பரப்பளவிலேயே நெல் நடவு நடைபெற்றது. அதே நேரத்தில் நடவு ஆட்கள் கூலி உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வால் இந்த ஆண்டு ஏக்கருக்கு 30 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளதாகவும், அரசு கொள்முதல் நிலையங்களின் மூலமாக கொள்முதல் செய்யும் நெல்லுக்கு கிலோ 19 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.