திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.31) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆட்சியர் கிருஸ்துராஜ் முன்னிலையில் குறைகளைத் தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் நீரா. பெரியசாமி பேசியதாவது, “உடுமலை பேட்டை, குடிமங்கலம் கிராமத்தில் பி.ஏ.பி. வாய்க்கால் வந்ததால் ஏகப்பட்ட விவசாயிகளுக்கு இட அளவீடு செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது.
பிஏபி பதிவில் சேர்த்தவர்கள் சர்வேயர் பிரிவில் சேர்ப்பதில்லை, சர்வேயருக்கு பணம் கட்டி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு நபருக்கு 25 ஆயிரம் கேட்டுள்ளனர். 19 ஆயிரம் விதம் 10 விவசாயிகள் கொண்டாம்பட்டி கிராமத்தில் கொடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இடம் அளவீடு செய்யவில்லை. பணம் வாங்கிய சர்வேயர், பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு இடம் மாறுதல் செய்யப்பட்டு சென்றுவிட்டார்.
கடந்த 5 ஆண்டு காலமாக நில அளவீடுக்காக விவசாயிகள் காத்தபடி இருக்கின்றனர். இந்த நிலையில் குடிமங்கலம் பகுதியில் ‘ஸ்ரீ மீனாட்சி கார்டன்’ என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சர்வே செய்ய விண்ணப்பித்து 5 நாள்களில் சர்வேயர்கள் 6-க்கும் மேற்பட்டோர் வந்து நிலம் அளவீடு செய்து ஒரே நாளில் வந்து அளவீடு செய்து கல் நட்டுவைத்துவிட்டுச் செல்கின்றனர். இது எவ்வாறு நடக்கிறது?. தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு இந்த துறையில் உள்ள அதிகாரிகளைக் கண்டிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.