திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி அமைப்பிற்கான கட்டுமானப் பணிகளின்போது மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு நேற்றைய (செப்.22) தினம் மின்தடை ஏற்பட்டதால் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டு இருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.
மருத்துவமனை, மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆக்சிஜன் வழங்குவதில் இடையூறு ஏற்படவில்லை என்றும் உயிரிழந்தவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் விளக்கம் தரப்பட்டது. இதைத்தொடர்ந்து அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்தச்சூழ்நிலையில், கடந்த 16ஆம் தேதி கரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருப்பூர் மும்மூர்த்தி நகரைச் சேர்ந்த அனுராதாவும் ஆக்சிஜன் தடையேற்பட்டதில் உயிரிழந்ததாகக் கூறி அவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கூறி போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அவரது உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், கணவர் இல்லாமல் வாழ்ந்து வந்த அனுராதவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தையொட்டி பலரும் மருத்துவமனையில் வசதிகளை மேம்படுத்தவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். அதன் ஓர் அங்கமாக மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதாகவும், மாவட்ட நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புக்குக காரணம் எனவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தின்போது குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க:திருப்பூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் உயிரிழப்பா? - ஆட்சியர் விளக்கம்