திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னால் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தனும் , திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனும் போட்டியிடுகின்றனர்.
வாக்கு கேட்டு வர வேண்டாம்: சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்கள்! - திருப்பூர்
திருப்பூர் தொழில்துறையை பாதிப்புக்குள்ளாக்கிய 'அதிமுக பாஜக கூட்டணி வாக்கு கேட்டு வரவேண்டாம்' எனவும், ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் 'திமுக - கம்யூனிஸ்ட்டுகள் வாக்கு கேட்டு வரவேண்டாம்' என வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியதால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக பாஜகவினர் பரப்புரை செய்துவந்த நிலையில், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இங்கு ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் திமுக - கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என போஸ்டர்களை ஒட்டினர்.
இதற்கு பதிலடியாக ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாலும், அதேபோல் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாராபட்சம் காட்டியதாலும், இத்தெருவில் பெண் குழந்தைகள் இருப்பதாலும், தொழில்துறை நலிவடைந்ததாலும் அதிமுக - பாஜகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எனவும் வீடுகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. திருப்பூர் மாநகரப் பகுதிகளில் இரு தரப்பினரும் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.