திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரவியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அனுப்பர்பாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாஜக கட்சிக்கு அடிமையாக உள்ள அரசு வேண்டுமா என்ற கேள்விக்கான பதில் கூறும் தேர்தலாக இது அமையவுள்ளது. அடிமை அரசிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டிய மகத்தான கடமை நம்மிடத்தில் உள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்களுக்கான விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டபோது மக்களை பற்றி சிந்திக்காமல் அதிமுக எம்பிக்கள் அதற்கு ஆதரவளித்தனர். தற்போது பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுக்கு விற்பது குறித்து கேள்வி எழுப்பாமல் அதிமுக அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.
மதவாத பிரிவினை சக்திகளை தமிழ்நாட்டில் அனுமதிக்காதீர் தமிழ்நாட்டை ஆட்சி செய்துவரும் அதிமுகவானது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்சின் பினாமியாக உள்ளது. அதிமுகவிற்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் பாஜகவிற்கான வாக்குகளாக மாறும். மதவாத பிரிவினைவாத சக்திகளை தமிழ்நாட்டில் அனுமதிக்காமல். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை மதசார்பின்மையை காப்பாற்ற கடுமையாக உழைக்கும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.