தருமபுரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார். திமுகவைச் சேர்ந்தவரான இவர், மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பின்னர், கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வானார்.
ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவரான இவர், தனது நாடாளுமன்ற உரை, தொகுதி சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றை ட்விட்டரில் தொடர்ந்து பதிவிடுவார். இந்நிலையில், நாடாளுமன்ற அலுவல்களைக் காண்பதற்கு ஆசையாக இருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் சிலர் பதிவு செய்தனர்.
செந்தில்குமார் எம்.பி ட்வீட் இதையடுத்து, தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்த செந்தில்குமார் எம்.பி, தற்போதுவரை 70 பேரை நாடாளுமன்ற அவைக்கு அழைத்துச் சென்று அசத்தியுள்ளார். பலர் அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை தங்களின் ட்விட்டரில் பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துவருகின்றனர்.
பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் உறவினர்களை மட்டுமே நாடளுமன்ற அவை நடவடிக்கைகளை பார்க்க அழைத்துச் செல்லும் நிலையில், வித்தியாசமான முறையில் திமுக எம்.பி செந்தில்குமார் செயல்படுவது அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: திமுக எம்.பி. செந்தில்குமார் சிறப்பு நேர்காணல்!