திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நடந்த 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி கெயில் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களது கோரிக்கை மனுவைப் பெற்றார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய கனிமொழி, "டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடும் குளிரிலும், டெல்லி எரியும் அளவிற்கு வடமாநில விவசாயிகள் போராடிவருகின்றனர். அரசு அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இருப்பினும் தொடர்ந்து விவசாயிகள் போராடிவருகின்றனர். வேளாண் திருத்தச் சட்டம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகுவைக்கும் சட்டமாக உள்ளது. இந்தத் திட்டங்களை அனைவரும் எதிர்த்துவரும் நிலையில் இதனை ஆதரிப்பவர்தான், தன்னை விவசாயி எனச் சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி.
விவசாயிகளின் கருத்துக்களுக்கு காது கொடுக்காத சர்வாதிகார ஆட்சிதான் அதிமுக ஆட்சி. தனது பதவியை காத்துக்கொள்ள விவசாயிகளின் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாத முதலமைச்சர் நமக்குத் தேவையா? இந்த உலகத்தை கரோனாவிடமிருந்து அறிவியல் காப்பாற்றவில்லை விவசாயிகள்தான் காப்பாற்றினார்கள்" என்றார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை, இடைத்தரகர்களும் எதிர்க்கட்சிகளும் தூண்டிவிட்டு நடத்தும் போராட்டம் என பாஜக தலைவர் முருகன் தெரிவித்திருப்பது விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் செயல் ஆகும்.
கடும் குளிரிலும் வெட்ட வெளியிலும் போராடும் விவசாயிகளை இவ்வாறு கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்றச் செயல்" என்றார்.
இதையும் படிங்க:தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இல்லை - கே.எஸ். அழகிரி