திருப்பூர்: அனைத்து மத பண்டிகைகளும் கொண்டாடும் திமுக அரசு விநாயகர் சதுர்த்தியை புறக்கணிப்பதாகவும் அவர்களுக்கு விநாயகர் தண்டனை கொடுப்பார் என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (செப். 18) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திருப்பூர் ராமமூர்த்தி நகரில் இந்து முன்னணி பொது செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விநாயகரை தரிசனம் செய்து அங்கு நடந்த கோலப்போட்டிகளை பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம், "விநாயகர் சதுர்த்தியானது நடக்கக் கூடிய அரசாங்கத்துக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். அவர்கள் கட்சி அலுவலகத்தில் ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழா நடக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து முன்னணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. சில அரசியல் கட்சிகள் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் ரோட்டுக்கு வந்து சுதந்திரத்துக்காக போராட வேண்டும் என்பதற்காக விநாயகர் சதுர்த்தியானது பால கங்காதர திலகரால் தொடங்கப்பட்டது.