திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர், தேமுதிகவில் இணையும் விழா இன்று (ஜன.10) நடைபெற்றது . இதில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் நிச்சயமாக கிளைமாக்ஸில் வந்து, பிரச்சாரம் மேற்கொள்வார். அதிமுக கட்சியின் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறி இருக்கக் கூடிய சூழ்நிலையில், நாங்களும் காத்திருக்கிறோம்.
தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்பு தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு அறிவிக்கப்படும். உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். இதுபோன்ற பேச்சுக்களை அவர்கள் தவிர்ப்பது நல்லது. அவர் நிறையச் சாதிக்க வேண்டிய சூழ்நிலையில் அவப்பெயரைப் பெற்று விடக்கூடாது.
மேலும் பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களைத் தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் போராட்ட உரிமையைப் பறிக்கக் கூடாது” என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், “தேமுதிக தனித்து நின்றாலும், கூட்டணியிலிருந்தாலும் தேமுதிக தனது இலக்கை அடையும்” என்று கூறியுள்ளார்.