தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திடீர் பயங்கர சத்தம்... கண்விழித்துப் பார்த்தால் ரத்த வெள்ளம்' - விபத்தில் நடந்தது என்ன?

திருப்பூர்: அவினாசி அருகே விபத்துக்குள்ளான கேரள அரசுப் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், விபத்து நடந்தது குறித்து கூறியுள்ளார்.

பேருந்து விபத்து
பேருந்து விபத்து

By

Published : Feb 20, 2020, 1:33 PM IST

Updated : Feb 20, 2020, 3:18 PM IST

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சேலத்திலிருந்து கேரளாவில் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் தற்போது வரை ஆறு பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்; 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்ததில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் சாலையில் இருந்த தடுப்பைக் கவனிக்காமல் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதென தெரியவந்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், காவல் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அவினாசி பேருந்து விபத்து

இந்நிலையில், விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், "2 அல்லது 3 மணி இருக்கும் நாங்கள் எல்லாரும் நன்றாக தூங்கி கொண்டிருந்தோம். அப்போது பயங்கர சத்தம் கேட்டது. பின்னால் அமர்ந்திருந்த நான் முன்னாடி தூக்கி வீசப்பட்டேன். நான் கண்விழித்துப் பார்க்கும்போது, என்னுடன் பயணம் செய்த அனைவரும் ரத்த வெள்ளத்தில் பரிதவித்தனர்.

பின்னர் உடனடியாக, பேருந்தின் எமர்ஜென்சி சன்னலைத் திறந்து பயணிகளை வெளியேற்ற உதவி செய்தேன். அதன்பின், கடைசியாக நான் பேருந்திலிருந்து வெளியேறி வந்தேன். எனக்கும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்தவர்களில் பாதி நபர்கள் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது” என்றார்.

இந்த விபத்து குறித்து, கேரளா மாநில காவல் கண்காணிப்பாளர் சிவவிக்ரம் கூறுகையில், ”இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மொத்தம் 48 பேர் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை அவசர ஊர்தி முலம் கேரளா கொண்டுசெல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. இறந்த 19 பேர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்” என்றார்.

இதையும் படிங்க:கொரோனா வைரஸ் எதிரொலி - பயணிகள் குறைந்ததால் 'சென்னை டூ ஹாங்காங்' விமான சேவைகள் ரத்து!

Last Updated : Feb 20, 2020, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details