திருப்பூர்:மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்துவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை மாறுதல் செய்திட வேண்டும் என, அரசு மருத்துவமனை எதிரே நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது மின்தடை ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்துவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.