திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கின்ற வகையில் கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்தும் இதனை தடுக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி குழு தலைவர் ஆர்.அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு இன்று (ஜூன் 27) அளித்துள்ளனர்.
இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சியின் அதிமுக எதிர்க்கட்சி குழு தலைவரும், 42 வது வார்டு கவுன்சிலருமான ஆர்.அன்பகம் திருப்பதி தலைமையிலான அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் இணைந்து அளித்த மனுவில், 'திருப்பூர் மாநகராட்சி 459 வார்டு கோம்பைத் தோட்டம், காயிதே மில்லத் நகர் பள்ளிவாசல் பின்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகிறது. இந்தப் பகுதி அதிகளவு மக்கள் புழக்கம்கொண்ட ஒரு பகுதியாகும். மேலும், 45 வார்டுகளை கொண்டுள்ளதனால் முக்கிய செயல்பாடுகளைக் கொண்ட பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவைகள் அருகருகே உள்ள பகுதியாகும்.
இந்த சுத்திகரிப்பு திட்டத்தினால் காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு ஆகிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என இப்பகுதி பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களை, முன்னதாகவே பணிபுரிந்து வருகிற அந்தந்தப் பகுதிகளிலேயே பணியில் அமர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். வடக்கு பகுதியில் சாந்தி தியேட்டர், சாமுண்டிபுரம், காந்தி நகர், பெரியார் காலனி, அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு அனைத்தும் ஒரே இடத்தில் வந்து சேரும் விதமாக உள்ளது.
இப்பகுதியில் புதியதாக மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தயாராகி வருவதாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து எந்த வார்டு மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் தனித்தனியாக பல பிரிவுகளாகப் பிரித்து, கழிவுநீரை வெளியேற்றி நல்லாற்றுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். பயன்பாட்டுக்கு வராத பாதள சாக்கடைக்கு வரி விதித்திருப்பதை ரத்து செய்து, பாதாள சாக்கடை பயன்பாட்டுக்கு வந்த பின்பு வரி விதிப்பு குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.
பில்லூர் அணை குறுக்கே மற்றொரு அணை கட்ட கேரள அரசு திட்டமா?:திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தப்புள்ளி விபரத்தில் முழுமையான விதிமுறைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட சுகாதாரத்தறை அதிகாரிகள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த மாமன்ற கூட்டத்தில் மேயரிடமும், ஆணையாளரிடமும் பில்லூர் அணையை (Pillur Dam) தடுக்கின்ற விதமாக கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதை தடுக்க வேண்டும். மேலும் பில்லூர் அணைக்கு (Kerala Govt Build a Dam into Pillur Dam) வரக்கூடிய தண்ணீரை கண்காணித்து ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைக்க சொல்லி அ.இ.அ.தி.மு.க கழக மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக 30.05.2023 அன்று கடிதம் கொடுத்திருந்தோம்.