பின்னலாடை துறையில் ஏற்றுமதியின் மூலம் ஆண்டிற்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் எனப் பின்னலாடை வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னோடி நகராக விளங்கிவந்த திருப்பூர், தற்பொழுது கரோனா பாதிப்பால் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் திருப்பூரிலிருந்து ஏற்றுமதிசெய்யப்பட்ட ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருள்கள் தற்போதுவரை ஐரோப்பிய, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள துறைமுகங்களில் தேங்கி நிற்பதாலும், உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாலும் பின்னலாடைகளுக்கான தேவை 80 விழுக்காடு அளவுக்கு குறைந்து வரலாறு காணாத வகையில் வர்த்தகம் சரிந்துள்ளது.
இதன் காரணமாக அனுப்பப்பட்ட 6,000 கோடி ரூபாய் ஆர்டர்களுக்கான பணத்தைப் பெறுவதிலும் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விற்பனையே இல்லாமால் போனதால், கொடுத்த ஆர்டர்களை சில வெளிநாட்டு நிறுவனங்கள் ரத்துசெய்துள்ளன.
அதேபோல் திருப்பூரில் மேற்கொள்ளப்பட்டுவந்த பணிகளை நிறுத்த வேண்டும் எனவும், குறைவான பொருள்களை மட்டுமே அனுப்பினால்போதும் அதுவும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அனுப்ப வேண்டும் எனவும் வெளிநாட்டு நிறுவனங்கள் கறராகக் கூறுவதாலும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு தயார்செய்யப்பட்ட பின்னலாடை பொருள்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர் அத்துறையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள்.
இது தொடர்பாக ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், “இதுபோன்ற சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கி இயல்புநிலைக்குத் திரும்ப ஆறு மாதம் முதல் ஒரு வருடம்வரை ஆகும் என சோகத்துடன் கூறுகிறார்கள்.
தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் உலக மக்கள் அனைவரும் உணவுப் பொருள்களுக்கும் மருத்துவப் பொருள்களுக்கும் அதிகப்படியாக செலவுசெய்கிறார்கள். ஒருவேளை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினாலும் உணவுப் பொருள்களுக்கான தேவையே பிரதானமாக இருக்கும்.