கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை மத்திய மாநில அரசுகள் மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து முடக்க உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் ஏற்றுமதி இறக்குமதி என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள், அதன் உப நிறுவனங்களான சாய ஆலை, பிரிண்டிங், எம்ப்ராய்டரி, வாஷிங் என பல நிறுவனங்களும் அவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் 50 முதல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ஏற்றுமதியும் 12 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் என 48 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக திருப்பூர் விளங்கிவருகிறது.
கோடை காலங்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறும் நிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமையில், ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.