திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2021ம் ஆண்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள் வெளியானது. இந்நிலையில் அந்த செய்தியில் வெளியான புகைப்படங்களை மார்பிங் செய்து சாராய வழக்கில் திமுகவினர் 5 பேர் கைது என கடந்த, 5 தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பல்லடம் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் என்பவர், ஆதாரத்துடன் சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளராக இருக்கும் சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன் என்பவரை கைது செய்துள்ளனர்.
52 வயதான இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தொழிலின் நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு சென்று வரும் இவர், அங்கிருந்தவாறு இதுபோன்ற தவறான தகவல்களை இணையத்தில் பகிர்வதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பட்டியலினத்தவர் என்றால் இப்படி செய்வீர்களா? - ஊராட்சி துணைத் தலைவர் குற்றச்சாட்டு
இந்நிலையில் நேற்று கோவையில் இருந்து குன்னூர் சென்ற அவரை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது இந்த குற்ற செயலுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தோர் மற்றும் பாஜகவினர் சிலர் உதவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் தொடர்பான புகார்களும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களும், நடவடிக்கை கோறி நெருக்கடிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக மீது அவதூறு பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேடுவதற்காக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முயற்சிப்பதாக திமுகவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசு பேருந்துகளில் சீட் முன்பதிவு அதிகரிப்பு.. அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!