தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வளர்மதி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவதூறு செய்திகளை பரப்பி, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் லாபம் பார்க்க முயல்கிறார். பத்திரிகையில் வெளியிட்டதை பொய் செய்தி என ஸ்டாலின் சொல்கிறார். அதில் என்ன பொய் என கேட்கிறோம், அதை சொல்ல மறுக்கிறார்.
எங்களுடைய அரசில் ஒளிவு மறைவின்றி இ-டெண்டர் விட்டுள்ளோம். திமுக ஆட்சியில் பெட்டியில் போட்டனர். 210 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டு 430 கோடி ரூபாய்க்கு பணி முடிக்கப்பட்டது அதுதான் ஊழல். அதனை விசாரிக்க்க நீதிமன்றம் சென்றோம் அதற்கு தடையாணை பெற்றார்கள். ஆனால் இன்று அவர் எங்களை குறை சொல்கிறார்.
திமுகவில் தலைவர் முதல் தொண்டர் வரை பொய்தான் -முதலமைச்சர் குற்றச்சாட்டு! ஏழு பேர் விடுதலையில் அன்றைய திமுக முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டணை தீர்ப்பை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றினர். இப்படியான தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு தலைவர் முதல் தொண்டர்வரை இப்போது பொய் பேசி வருகின்றனர். 2000ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது விடுதலைக்கான முயற்சியை மேற்கொண்டிருந்தால் அவர்கள் இந்நேரம் விடுதலை ஆகியிருப்பர். தற்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு அருகதையில்லை” என்றார்.
இதையும் படிங்க...பிரதமர் தமிழ்நாடு வருகை: பாதுகாப்புப் பணியில் 6,000 காவலர்கள்