தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வரக் கூடாது” - முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin Speech: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தொண்டர்கள் 3 கடமைகளைக் கட்டாயமாக ஆற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

dmk-Tiruppur-west-zone-polling-officers-meeting-cm-stalin-speech
பா.ஜ.க டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை - முதல்வர் ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 6:55 PM IST

திருப்பூர்:காங்கேயம் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “நமது பொதுச் செயலாளர் கூறியதுபோல நாம் ஒரு தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அது 2024 நாடாளுமன்றத் தேர்தல். நாம் தேர்தல் பணியின் தொடக்க பணியான வாக்கு முகவர் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறோம். உங்கள் முகங்களைப் பார்ப்பதற்காகத்தான் திருப்பூர் வந்து இருக்கிறேன்.

ஏன் இவ்வளவு அலைகிறீர்கள், பயணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் எனப் பலர் கூறும்போது தொண்டர்களைப் பார்க்கும்போது களைப்பு காற்றாக மாறி உற்சாகமாக இருக்கிறது. இந்தியை எதிர்த்தும் தமிழைக் காக்க 1985ஆம் ஆண்டு போராட்டத்தின்போது கல்லூரி மட்டும் இல்லாமல் பள்ளி மாணவர்களும் போராடிய மாவட்டம், திருப்பூர்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்து இருக்கிறோம். 40 நமதே நாடு நமதே என்பது வாக்குச்சாவடி முகவர்கள் மீது உள்ள நம்பிக்கைதான். வெற்றி மட்டுமே இலக்காக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பதுதான் முதல் கடமை. முறையான வாக்காளர்களை நம்முடன் ஈர்ப்பதுதான் இரண்டாம் கடமை. வாக்கு மையத்திற்கு வாக்காளர்களை வர வைப்பது மூன்றாம் கடமை. நம்மை நிராகரிப்பவர்கள் இந்த நாட்டில் இருக்க மாட்டார்கள். மக்கள் மீது நமது ஆட்சியின் மீது நம்பிக்கை இருக்கிறது.

பா.ஜ.க மூன்றாம் முறை ஆட்சிக்கு வரக் கூடாது. அது முக்கியம், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய எந்த வாக்குறுதியும் பா.ஜ.க நிறைவேற்றவில்லை. பா.ஜ.க ரிவர்ஸ்ல சென்று கொண்டு இருக்கிறது. ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறினார். ஆனால், 40 வருடங்கள் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் சொந்த வீடு கட்டித் தருவதாக மோடி கூறினார். ஆனால் செய்யவில்லை. பணமதிப்பிழப்பு காரணமாக கோவை மற்றும் திருப்பூர் செயல்பட முடியாமல் ஆகிவிட்டது.

பிரதமர், தமிழ்நாட்டிற்குக் கொடுத்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றவில்லை. இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. சேலம் உருக்காலையை நவீனப்படுத்தப்படும் எனக் கூறினார்கள். ஆனால், நிறைவேற்றவில்லை. ஈரோட்டில் ஜவுளி உற்பத்திக்கான உள்கட்டமைப்பை உருவாக்கித் தரவில்லை. ஈரோடு மஞ்சளை இந்தியாவே நேசிக்கிறது. மஞ்சளை ஆயுர்வேதிக் மட்டும் அல்லாமல், அழகு சாதனப் பொருளாக மாற்றுவோம் எனக் கூறினார்கள், ஆனால் செய்யவில்லை.

பா.ஜ.க டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. புதிதாக நான்கு மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்போம் எனக் கூறினார்கள், அதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தனது வாக்குறுதி பற்றிப் பேசவில்லை. சந்திரயான் விட்டோம், ஜி 20 மாநாடு வெற்றி எனப் பெரிதாகப் பேசுகிறார்.

ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாடு தலைமை வகிக்கும் மாநாடு, G20. எனவே G20 மாநாட்டுக்குப் பா.ஜ.க உரிமை கொண்டாட முடியாது. நேரு காலம் முதல் விதைக்கப்பட்ட விதைதான் சந்திரயான்-3 வெற்றி. நேரு தொடங்கி மன்மோகன்சிங் வரை பல பிரதமர்களின் பங்கு அதில் உள்ளது. எதிர்கட்சியினர், இதனை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி ஆதாரத்துடன் பேசினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் எந்த நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தோம் எனக் கூற ஒன்றும் இல்லை. அதனால்தான் மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். அதையாவது சொல்லி வாக்கு கேட்கலாம் என்று. நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் 33 சதவீத விழுக்காடு கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால், உடனடியாக நிறைவேற்றி இருக்கலாம்.

ஆனால், 2029ஆம் ஆண்டு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கின்றனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதிப் பங்கீட்டினை இணைத்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறைய வாய்ப்பு உள்ளன. இந்த வஞ்சகத் திட்டத்தை எதிர்த்து நாம்தான் குரல் கொடுத்து இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க டெபாசிட் கூட வாங்க முடியாத தகுதியில்லா கட்சி என்று செய்ய வேண்டும். அடிமை அதிமுகவைப் பயமுறுத்தி, அச்சுறுத்தி, தன்னுடைய கூட்டணியில் வைத்து உள்ளனர். சண்டையிடுவதாக வெளியில் நடித்து வருகிறார்கள். எதனால் இந்த நடிப்பு, அதிமுகவை ஆதரித்தால் அவர்களில் ஊழல்களுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டி வரும், பா.ஜ.கவை ஆதரித்தால் பா.ஜ.க மதவாதத்திற்கு அதிமுக துணை போக வேண்டி வரும், அதனால் நடிக்கிறார்கள்.

பா.ஜ.க தோப்புக்கரணம் போடு எனக் கூறினால், உடனே எண்ணிக்கையை எண்ணிக் கொண்டு தோப்புக்கரணம் போடும் கட்சிதான் அதிமுக. இங்கு இவ்வளவு பிரச்சினை நடக்கும்போது அமிஷ்சாவை பார்க்க பழனிசாமி சென்றது, ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறது. காப்பாற்றுங்கள் எனக் காலில் விழுவதற்குச் சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பா.ஜ.க தலைவர்களை திடீரெனச் சந்தித்தனர்.

அதிமுக ஆட்சியிலிருந்து பா.ஜ.க மூலம் தமிழகத்திற்குக் கொண்டு வந்த நன்மைகள் என்ன? எதுவும் கிடையாது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிக்கிறார், பல்லக்குதூக்கி பழனிசாமி. எப்படி தமிழ்நாடு மக்கள் வாக்கு அளிப்பார்கள் எனப் பழனிசாமி பகல் கனவு காண்கிறார் என தெரியவில்லை.

பழனிசாமி அவர்களே, சட்டமன்றத்திற்கு சேர்த்து தேர்தல் வந்தால் உங்கள் கட்சி இப்போது இருக்கும் நிலையும் போய்விடும். பா.ஜ.க எதிர்ப்பதாக மக்களிடம் காட்டிக்கொண்டு மறைமுகமாக பா.ஜ.கவைச் சந்தித்து இருக்கும் கொத்தடிமை கூட்டத்திற்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் படுதோல்வியே பரிசாகத் தர வேண்டும். இதுவரை பா.ஜ.க அதிமுக மக்களை ஏமாற்றினார்கள். இப்போது மக்களால் தோற்கடிக்கப்படவேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:சென்னையில் நாளை அதிமுக ஆலோசனைக் கூட்டம் - ஈபிஎஸ் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details