தமிழ்நாட்டில் உங்களுக்கு உணவில் என்ன ஃபேவரைட் என்று யாரை நிறுத்திக் கேட்டாலும், சட்டென யோசிக்காமல் ‘பிரியாணி’ என்றே பெரும்பாலும் பதில் வரும். பிரியாணியின் சொந்தக்காரர்களான முகலாயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்திருந்தாலும்கூட, அவர்களின் பிரியாணியோ நம்மை இன்னும் விடுதலை செய்வதாக இல்லை.
பிரியாணி போதை
அது மேலும் மேலும் நம்மை சிறைப்பிடித்துக்கொண்டு, மது, மாது போதைபோல் சுவை என்ற பாச கயிற்றில் கட்டிவைத்துள்ளது. பெண்களின் கூந்தலுக்கு மட்டுமல்ல, பிரியாணிக்கும் ஒரு மணம் உண்டு. எங்கு சென்றாலும் மணத்தால் கட்டியிழுக்கும் வல்லமை பிரியாணிக்கு மட்டுமே உண்டு என்று சொன்னால் எவராலும் மறுக்க முடியாது, ஏனென்றால் நமது நாக்கு பிரியாணியின் சுவைக்கு தீவிர விசிறி.
என்னதான் பிரியாணிக்கு நாம் தீவிர விசிறியாக இருந்தாலும், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்கள் ஊன் சோறு என்ற பிரியாணி போன்ற ஒரு உணவை சமைத்து சாப்பிட்டதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் குவிந்துகிடக்கின்றன. அதனால், பிரியாணிக்கும் முன்னோடி நாம்தான் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
இலக்கிய பிரியாணி
சங்க கால பதிற்றுப்பத்துப் பாடலில் ”சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்ஓடாப் பீடர் உள்வழி இறுத்து” என்ற வரிகளிலும், ”புலவு நாற்றத்த பைந்தடிபூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவைகறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது பிறிது தொழில் அறியா ஆகலின்” என்ற கபிலரின் வரிகளுமே அதற்குச் சான்று!
ஊன் என்றால் இறைச்சி, அதன் நாற்றம் இல்லாமலிருப்பதற்காகச் சோறில் தாளித்து எடுத்துச் சமைத்தார்கள் என இவ்வரிகள் உணர்த்துகின்றன. இதனையே பிற்காலத்தில் முகலாயர்கள் பிரியாணி என்ற பெயரில் சமைத்தனர். வரலாறு முக்கியம் அமைச்சரே!அப்பெயர்பெற்ற பிரியாணிக்கு, அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்பது காலத்தின் கட்டாயம்.