திருப்பூர்: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலானது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளதாகவும், பலரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதாகவும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கவலைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய பீகார் அரசு, 4 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
இந்தக் குழு நேற்று (மார்ச் 4) சென்னை வந்த நிலையில், இன்று (மார்ச் 5) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இவ்வாறு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக் குமார், சிறப்பு படை பணி காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், பீகாரைப் பூர்வீகமாக கொண்ட திண்டுக்கல் டிஐஜி அபினவ் குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தொழில் துறையினர், தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், “திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசிற்கு நன்றி. பீகார் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினோம். இங்கு பல சங்கப் பிரதிநிதிகள் உடன் பேசினோம். தவறான வீடியோக்களை தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோக்கள் பரவியதன் காரணமாக பயம் உண்டானது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம், மார்ச் மாதம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினார்கள்.