திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள பெரியாயிபாளைம் பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜசேகர்(33). இவர் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற ஆங்கில பத்திரிகையில் திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ராஜசேகர், இவரது தாயார் யமுனா ராணி(52), சகோதரி பானுப்பிரியா(31), பானுப்பிரியாவின் ஆண் குழந்தை இன்ப நித்திலன்(2) ஆகியோர் பெரியாயிபாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அவிநாசி நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்றபோது, ஊட்டியிலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ராஜசேகரின் தாயார் யமுனா ராணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜசேகர் கோவை தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகோதரி பானுப்பிரியா, குழந்தை இன்ப நித்திலன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.