திருப்பூர்: காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் கண்ணன், நாராயணன் ஆகியோருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாடகைக்கு, பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பனியன் வேஸ்ட் குடோன் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூலை 02) ஞாயிற்றுக் கிழமை என்பதால் தொழிலாளர்கள் விடுமுறையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள வேஸ்ட் குடோனில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள் மீது திடீரென பற்றி எரியத் துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, தீயானது வேகமாக பரவி அருகில் இருந்த பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் இருந்த பின்னலாடை துணிகள் மற்றும் பின்னலாடை இயந்திரங்கள் மீது பரவியது.
இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து தீயை அணைக்க உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர், 3 தனியார் தண்ணீர் லாரிகளின் உதவி மூலம், இரண்டு மணி நேர போரட்டாத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. நல்வாய்ப்பாக, நேற்று விடுமுறை தினம் என்பதால், தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாத காரணத்தால் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.