டாஸ்மாக் கடை முன்பு கத்தியுடன் தர்ணா செய்த பெண்! - காவல் துறை
திருப்பூர்: பாண்டியன் நகர் பகுதியில் அதிகாலையிலேயே சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதால், ஆத்திரமடைந்த பெண் ஒருவர் கையில் கத்தியுடன் கடைமுன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் அமைந்துள்ள 2,310 எண் கொண்ட டாஸ்மாக் கடைக்கு முன்பாக தினமும் அதிகாலை ஐந்து மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரின் கணவர் பனியன் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். இவர் பாண்டியன் நகரில் சட்டவிரோதமாக விற்கும் மதுபானத்தை தினமும் குடித்துவிட்டு பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்தார்.
இதனால் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுவதைத் தாங்கமுடியாமல், ஆத்திரமடைந்த கவிதா கையில் கத்தி, தண்ணீர் புட்டியுடன் டாஸ்மாக் கடைமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, சாலைமறியலிலும் ஈடுபட்டார்.
பெண் ஒருவர் கத்தியுடன் டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர்.
இதனால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருமுருகன் பூண்டி காவல் துறையினர் வந்தனர். இதனிடையே மது விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.