திருப்பூர்:அவிநாசியில் சேலம் - கோவை இடையேயான தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் இன்று நடைபெற்று வரும் திருமணத்திற்காக, ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் ஆனந்தன் என்பவர், சமையல் மற்றும் உணவு பரிமாறுவதற்காக 10 பெண்கள் உள்ளிட்ட 20 ஆண்கள் என அழைத்து வந்துள்ளார்.
அதில் ஆனந்தன் அழைத்து வந்த சமையல் கலைஞர்களுள், கரூர் மாவட்டம் பொகலூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (44),
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி 50 மற்றும் மற்றொரு நபருக்கு (விவரம் அறியப்படாத நபர்) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில், வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் சேர்ந்து, மற்றொரு நபரைத் தாக்கியுள்ளனர். பதிலுக்கு அந்நபரும் இவர்கள் இருவரையும் தாக்கியதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த நபரை இருவரும் சேர்ந்து அடித்து மண்டபத்தை விட்டு வெளியில் துரத்தியதாகவும் கூறப்படுகிறது.
அந்த மோதலில் பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் இணைந்து, அந்த விவரம் அறியப்படாத நபரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் அந்த விவரம் அறியப்படாத நபர் சாலையோரம் மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.