திருப்பூர்:தமிழ்நாட்டில் கரோனா தொற்று (Covid 19) பாதிப்பு குறைந்து வருகிறது. மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க ஒருவருக்குப் பன்றிக் காய்ச்சல் (Swine flu ) உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரக் காலமாக அந்த நபர் சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து இரு தினங்களுக்கு முன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்துள்ளார்.
அந்தப் பரிசோதனையின் முடிவில் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், "பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அவருடன் தொடர்பிலிருந்த நபர்கள் வெளியில் செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: TN and Puducherry News: அனுமதியின்றி இயங்கும் ஆட்டோக்களுக்குத் தடை