தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

73ஆவது சுதந்திர தினத்தில் வீரர்களை நினைவு கூறும் செய்தி தொகுப்பு - 73rd independence day

நாட்டின் 73ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெறும் இந்தத் தருணத்தில், சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட வீரர்களைப் பற்றி ஒரு கணம் சிந்தித்து நன்றியுடன் நினைவு கூறுவதே அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

independence day

By

Published : Aug 14, 2019, 12:47 PM IST

இந்திய விடுதலைப் போராட்ட தியாகியான திருப்பூர் குமரன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த நாச்சிமுத்து கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாக 1904ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். ராமாயி என்ற பெண்ணையும் தனது 19ஆவது வயதில் மணந்தார். இளம் பருவம் முதலே நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். காந்தியக் கொள்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர், திருப்பூரில் நடக்கும் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமை ஏற்று வழி நடத்தினார்.

இந்நிலையில் திருப்பூர் நகரில் 1932ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோது, தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் 1932 ஜனவரி 10ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றார். அப்போது, காவலர்களால் தாக்கப்பட்டு மண்டை உடைந்து தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரன் ஜனவரி 11ல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்று பேரன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். அவரது மரணம் இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை வெகுவாக தூண்டியது.

73ஆவது சுதந்திர தினத்தில் வீரர்களை நினைவு கூறும் செய்தி தொகுப்பு


குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்து வந்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தியாகி கொடி காத்த குமரனுக்கு தமிழ்நாடு அரசு அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு நூலகம், படிப்பகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குமரனின் நூறாவது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நினைவு தபால் தலையை இந்திய அரசு கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது.

குமரன் போன்ற ஆயிரக்கணக்கான வீரர்கள் இன்றைய சுதந்திர இந்தியாவிலும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். நாட்டை பல வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முனையும் அரசுகள் நல்லரசாக இருந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பல மக்கள் விரோத திட்டங்களை மக்களின் எதிர்ப்பை மீறி அரசுகள் செயல்படுத்த நினைப்பது நாட்டின் அமைதியை கெடுப்பதோடு எதிரிகளுக்கு சாதகமாக முடிந்து விடும். 73ஆவது சுதந்திர தினத்தில் நாடு முன்னேற்றப் பாதையில் வீர நடைபோட அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details