தாராபுரம் தாலுகா சூரிய நல்லூரை அடுத்த வேங்கிபாளையத்தைச் சேர்ந்த சிவகாமி என்பவரின் மனைவி ஜெயந்தி தம்பதியருக்கு பொன்மணி, லோகநாயகி என இரு மகள்கள்.
மூத்த மகள் பொன்மணிக்கு (25) ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் சக்தி நகர், முதல் குறுக்கு வீதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
மணிகண்டன் சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார். இத்தம்பதிக்கு அனன்யா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. பொன்மணி கடந்த ஓராண்டாக அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றுவந்தார். பின்னர், அவரது சொந்த ஊரான தாராபுரம், வேங்கிபாளையத்தில் அவரது பெற்றோர் இல்லத்தில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில் பொன்மணி நேற்று மாலை வெகுநேரமாகியும் கதவை திறக்காமல் இருந்தார். சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது சேலையில் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கதவினை உடைத்து அவரது உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இது குறித்து குண்டடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பொன்மணிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆனதால் தாராபுரம் சார் ஆட்சியர் அரசு மருத்துவமனைக்குச் சென்று பொன்மணியின் உடலை மருத்துவக் குழுவினர் மூலம் ஆய்வுசெய்து மரணம் குறித்து விசாரணை நடத்தினார்.