தமிழ்நாடு

tamil nadu

பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் - போதையில் இருந்த ஓட்டுனர்.!!

திருப்பூர்: பல்லடம் மாதப்பூர் அடுத்த நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் மினி பஸ் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மினி பஸ் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Sep 13, 2019, 2:41 PM IST

Published : Sep 13, 2019, 2:41 PM IST

பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்

வளையபாளையம் பகுதியிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் மினி பேருந்து ஒன்று பல்லடம் நோக்கி இன்று காலை மாதப்பூர் அடுத்த நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே தொட்டம்பட்டி நோக்கி வந்த மினி பேருந்துக்கு வழி விடுவதற்காக ஓட்டுனர் தார் சாலையிலிருந்து மண்பாதையில் இறக்கினார்.

ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அளவில் சாலை இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர்.

இதில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர், அப்போது அப்பகுதி மக்கள் மினி பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இது வாடிக்கையாக நடந்து வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் - போதையில் இருந்த ஓட்டுனர்.

மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மினி பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் பிரபாகரனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details