தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சதமடித்து கம்பீரமாய் நிற்கும் திருப்பூர்! சிறு தொகுப்பு... - palladam

பின்னலாடை உற்பத்தியின் மூலம் அடையாளமும், தனி அங்கீகாரம் பெற்ற திருப்பூர் மாநகரத்திற்கு 101 வயது ஆகிறது. கடந்த நூறு ஆண்டுகளில் திருப்பூர் மாநகரம் சாதித்தவை என்ன என்பது குறித்த ஒரு பார்வை...

tirupur

By

Published : Mar 18, 2019, 2:58 PM IST


தற்போது திருப்பூர் என அழைக்கப்படும் இந்த மாநகரம் சேர சோழ பாண்டியர்கள் காலகட்டத்தில் சிவாச்சாரியார்களால் ஸ்ரீபுரம் என்று குறிப்பிடப்பட்டு வந்தது. அன்றைய காலகட்டத்தில் சேர சோழ பாண்டியர்களுக்கு தனிநாடு இருந்தது போலவே, மேற்கு தமிழ்நாடு தொண்டை நாடு, கொங்கு நாடு என இரு பிரிவுகளாக இருந்தது. கொங்கு நாட்டுக்கென தனி எல்லை, வரலாறு, கலை, பண்பாடு என இருந்தது. அப்போது கொங்குநாடு 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டுவந்தன. அவற்றில் ஒன்றான குறுப்பு நாட்டில் பிரதானமாக இருந்தது தற்போதைய திருப்பூர். தற்போது மாசடைந்துள்ள நொய்யல் நதி அப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நதியாகும். போக்குவரத்திற்கு உதவியாகவும் இருந்தது.

தற்போதைய தாராபுரம் என அழைக்கப்படும் விராடபுரத்தில் பாண்டவர்கள் சில காலம் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது இதையறிந்த துரியோதனன் தங்களின் பசுக்களை திருடிச்சென்றதை அறிந்த பாண்டவர்கள் திருப்போர் புரிந்து பசுக்களை மீட்டு வந்ததால் திருப்போர் என்னும் சொல் திருப்பூர் என்றானது என வரலாறு குறிப்பிடுகிறது.

பின்னர் திருப்பூர் தற்போதைய பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்கு கீழ் ஒரு குக்கிராமமாய் இருந்து வந்தது. அப்போதே பல்லடத்தில் நடைபெற்றுவந்த பருத்தி தொழிலின் காரணமாக 1917ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திருப்பூர் 3ஆம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. அப்போது விட்டல்தாஸ் ஆனந்த ஜி சேட் முதல் தலைவராக இருந்தார்.

அதன்பின் படிப்படியாக வளர்ச்சியை எட்டி வந்த திருப்பூர் இரண்டாம் நிலை நகராட்சி, முதல் நிலை நகராட்சி என சுதந்திரத்திற்கு பின் 1983ஆம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக அந்தஸ்து பெற்றது. அப்போது வரை பல்லடம் தொகுதிக்குள்ளாக இருந்த திருப்பூர் அயராது உழைப்பின் மூலம் வென்று காட்டி 2008ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்வுபெற்றது.

அப்போது பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து சில வார்டுகளைக் கொண்டு 60 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியாக உயர்வு பெற்றது. வளர்ச்சியை அதோடு நிறுத்திக்கொள்ளாத திருப்பூர், 2009ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டமாக உதயமானது. ஆரம்ப காலத்தில் பல்லடம் பகுதியில் ஒரு அங்கமாக இருந்த திருப்பூர் காலப்போக்கில் மாவட்ட தலைமையிடமாக வளர்ந்து பல்லடத்தை தனக்குள் அங்கமாக கொண்டு வந்ததே திருப்பூரின் உழைப்பிற்கான ஒரு உதாரணமாக இருக்கிறது.

1935ஆம் அண்டு தனது குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும் மீறி எம்.ஜி. குலாம் காதர் சாகிப் தன்னுடைய சகோதரர் சத்தார் சாகிப்பையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டு பேபி நிட்டிங் நிறுவனம் என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பனியன் தொழிற்சாலையை உருவாக்கினார். அப்போது அவர் கொல்கத்தாவிலிருந்து கொண்டுவந்து சேர்த்த இயந்திரம் தலைசுத்தி இயந்திரம் என்றழைக்கப்பட்டது.


காதர் சாகிப் பனியன் தயாரிக்கும்போது தமிழகத்தில் மேல் ஆடை அணிபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தனது சகோதரருடன் சேர்ந்து தான் தயாரித்த துணிகளை திருப்பூர் அருகேயுள்ள சந்தைகளுக்கு கொண்டுசென்று விற்கத் தொடங்கினார். அன்றைக்கு இருந்த போக்குவரத்து இடையூறுகளையெல்லாம் கடந்து தனது தயாரிப்புகளை வெளி உலகிற்கும் கொண்டுசென்றார். அதன் பயன் இன்று திருப்பூர் 20 ஆயிரம் கோடி அந்நியச்செலவாணியை ஈட்டித்தந்து உலக அளவில் பிரசித்தி பெற்றதோடு திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம், மாநிலம் அயல் நாடு என சுமார் 20 லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிவருகிறது.


அதுமட்டுமல்லாது சுதந்திரப் போராட்டத்தின்போது திருப்பூரின் பங்கும் மிக முக்கியமானது. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தி வெள்ளையர்களின் காவலர்களால் அடிப்பட்டு கையில் ஏந்திய கொடியுடனே உயிர் நீத்த திருப்பூர் குமரனுக்க்கென தனி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்திலும் பல பரபரப்புகளை நிகழ்த்திய இடமாகவே திருப்பூர் இருந்துள்ளது. கொள்கைகளில் மாற்றம் கொண்டு பிரிந்த அண்ணாவும், பெரியாரும் முதல் முதலாக சந்தித்துக்கொண்ட இடமும் கூட திருப்பூர்தான். இதன் சாட்சியாய் இன்று திருப்பூர் ரயில் நிலையம் அருகே அவர்களின் சிலை இடம் பெற்றுள்ளது. தேசத்தந்தை காந்தியின் சாம்பலையும் இங்கு பத்திரமாக பாதுகாத்து, காதி பொருட்களையும் தயாரித்துவருகின்றனர்.

திருப்பூர் மாநகரம் நூற்றாண்டை கடந்த நிலையில் திருப்பூர் பின்னலாடைத் தொழில் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், 'மற்ற தொழில் நகரங்களைக் காட்டிலும் திருப்பூரில் ஒரு சிறப்பு என்னவெனில் நேற்றைய தினம் தொழிலாளர்களாக இருந்தவர்கள் இன்றைய தினம் முதலாளிகளாக உயர்ந்துள்ளனர் என்ற சூழ்நிலையை திருப்பூர் உருவாக்கியுள்ளது. தன் உழைப்புக்கேற்ற ஊதியம், அனைத்து வசதிகள், பாதுகாப்பு, என்பதே மற்ற மாவட்ட, மாநில தொழிலாளர்கள் திருப்பூர் வர காரணமும், இத்தனை ஆண்டுகளாக தொழில் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

இந்த நூறு ஆண்டுகள் இல்லாமல் இனிவரும் காலங்களிலும் தொழில்துறையில் திருப்பூர் பல்வேறு சாதனை படைக்க தயாராக இருக்கிறது. ஆனால் ஜிஎஸ்டி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற பல்வேறு நெருக்கடிகளால் திருப்பூர் தொழில் நகரம் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. இருப்பினும் மனித வாழ்வு உள்ளவரை ஆடைகளின் தேவை இருந்து கொண்டேதான் இருக்கும் எனவே திருப்பூர் தொழில் துறைக்கு எப்பொழுதுமே அழிவு கிடையாது' என்றார்.

பின்னலாடை நகரம், தொழில் நகரம், குட்டி ஜப்பான் என்றெல்லாம் பிறர் போற்றும்படி பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருந்தாலும் இதற்காக திருப்பூர் இழந்தவைகளும் அதிகம்தான். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் நொய்யல் நதி. தொழில் வளர்ச்சியால் காலப்போக்கில் மாசடைந்து இன்று பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. மேலும் 20 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூருக்கு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதே திருப்பூர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக குடிநீர் சாலை வசதி தொழிலாளர்கள் குடியிருப்பு ஆகியவை இன்னும் நிறைவேற்றாமல் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இருப்பினும் நூறு ஆண்டுகளை கடந்த திருப்பூரில் வசிப்பது பெருமையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details