மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.. திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை அடுத்த அடியத்தூர் கிராமம், தாயப்பன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (22). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் இன்றைக்கும் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மையா (60) என்பவர் அவரது நிலத்தில் உள்ள பம்ப்செட் மின்மோட்டார் ஓடாததால் சரி செய்யுமாறு ராகுலை அழைத்துள்ளார்.
இதனால் ராகுல் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென ராகுல் மீது மின்சாரம் பாய்ந்து கை முகம் ஆகியவை கருகி உயிருக்கு போராடியுள்ளார். அப்போது மையா ராகுலை காப்பற்ற விறகு கட்டையால் கீழே தள்ளி விட்டு, அங்கிருந்து மையா தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் ராகுலை பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நெக்குந்தி ரூ.15 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் - போலீசார் பணத்தை மீட்டது எப்படி?
மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராகுலின் உறவினர்கள் சிலர், ராகுல் மரணத்திற்கு மின்சாரம் பழுது சரிசெய்ய அழைத்துச் சென்ற மையா தான் காரணம் என்று, ஆத்திரமடைந்த மையா வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அங்கு பாரத்த போது வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் பூட்டிய வீட்டை உடைத்து வீட்டில் இருந்த டிவி மற்றும் மோட்டார் சைக்கிள், சமையல் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் உடைத்து சூறையாடியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விவசாய கிணற்றில் மின்மோட்டார் இயங்காத நிலையில் நிலத்தின் உரிமையாளர் மையா என்பவர் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், வீட்டின் அருகில் இருந்த கட்டிட மேஸ்திரி ராகுல் என்பவரை அழைத்து மின் பழுதை சீரமைக்க ட்ரான்ஸ்பார்மர் மீது ஏற வைத்து சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குற்றாலத்தில் திடீர் தீ விபத்து..50 கடைகளில் இருந்த 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்..!