திருப்பத்தூர்:வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்த அரசுப் பேருந்து, மாதனூர் அருகே வந்தபோது, ஆம்பூரைச் சேர்ந்த காவலர் ராஜேஷ் என்பவர் அந்தப் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வட மாநில இளைஞர்கள் இருவர் பேருந்தில் ஒரு பெரிய பார்சலுடன் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர். இது குறித்து காவலர் ராஜேஷ், வட மாநில இளைஞர்களிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின்னாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவலர் பார்சலை பிரித்துப் பார்க்க முற்பட்டபோது, ஒரு வடமாநில இளைஞர் பேருந்தில் இருந்து இறங்கி தப்பியோடியுள்ளார். பின்னர், உடனடியாக இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தயார் நிலையிலிருந்த போலீசார், பேருந்து வந்தவுடன் அதில் இருந்த இளைஞரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது, அதில் 40 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் என்பதும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து, அதன் பின்னர் வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி கஞ்சாவை எடுத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அன்வர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர் வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம்; கொள்ளை அடிக்கப்பட்டதில் 95% நகைகள் மீட்பு!