திருப்பத்தூர்: திருப்பத்தூரை அடுத்த ராச்சமங்கலம் காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (21). பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் கூடபட்டு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அப்பெண், நேற்று (ஆகஸ்ட்.19) தனது பெற்றோரை அலைபேசியில் அழைத்து, ”நாளை நீங்கள் என்னைக் காண வருவீர்கள்” என சந்தேகப்படும்படி கூறியிருக்கிறார். தொடர்ந்து ”எனக்கு மரணம் காத்திருக்கிறது” எனவும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திய இளம்பெண்
இதனால் பதறிப்போன பெண்ணின் பெற்றோர், சீனிவாசனைத் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது எந்தப் பிரச்னையும் இல்லை, நாங்கள் நன்றாகவே இருக்கிறோம் என சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட்.19) குடும்பப் பிரச்னையின் காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்
தங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோரும் உறவினரும் முன்னதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் வீட்டார் பேசுகையில், “இருவருக்கும் திருமணமாகி மூன்று மாதங்களே நிறைவடைந்துள்ளது.
அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தியது சீனிவாசன் வீட்டாருக்குத் தெரியாது எனக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தும்படியாக உள்ளது. எங்கள் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுவந்து பரிசோதித்த பின்னரே, அவர் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தியது அக்குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது” என்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான மூன்று மாதங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவால் கணவர் கொலை - மனைவி உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை