தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் அருகே கோயில் விழாவில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல்.. ஒருவர் படுகாயம்!

ஆம்பூர் அருகே நடந்த கோயில் திருவிழாவில் இரண்டு கிராமத்து இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Etv Bharat கோயில் விழாவில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல்
Etv Bharat கோயில் விழாவில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல்

By

Published : Jul 9, 2023, 6:10 PM IST

கோயில் விழாவில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர், தேவிகாபுரம் பகுதிகளில் வருடம்தோறும் ஆனி மாதம் தேவிகாபுரம், உடைய ராஜபாளையம், தோட்டாளம், சீனிவாசநகர், கொல்லாபுரம் உள்ளிட்ட ஏழு கிராமங்கள் ஒன்றிணைந்து மூன்று நாள்கள் கெங்கையம்மன் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த விழாவின் மூன்றாவது நாளான இன்று (ஜூலை 09) தேவிகாபுரம் பாலாற்றங்கரையிலிருந்து கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக வீதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பெண்கள் வழிநெடுகிலும் அங்கப் பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். மேலும் சிலர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் நேற்றிரவு (ஜூலை 08) அதே பகுதியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சின்ன தோட்டாளம் பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவரை, உள்ளூர் இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சின்னத்தோட்டாளம் பகுதியைச்சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேவிகாபுரம் பகுதி இளைஞர்களிடையே மோதலில் ஈடுபட்டு, பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

பின்னர் மோதல் முற்றி கட்டைகளால் தாக்கியும் அங்கிருந்த அன்னதானம் போட வைத்திருந்த அண்டா, மூடி உள்ளிட்டவைகளால் தாக்கியதிலும் தேவிகாபுரம் பகுதியைச்சேர்ந்த இளைஞர் மோகன் என்பவருக்கு முகப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த தேவிகாபுரம் பகுதி இளைஞர்கள் ஒன்று கூடியதால் மோதல் முற்றி அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மோதல் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, தகராறில் ஈடுபட்ட சின்ன தோட்டாளம் பகுதியைச்சேர்ந்த இளைஞர்களை விரட்டிச்சென்றனர். காவல் துறையினர் விரட்டியதைக் கண்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

மேலும், படுகாயமடைந்த இளைஞர் மோகனை மீட்ட அங்கிருந்த மக்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த மோதல் விவகாரத்தை அறிந்த ஆம்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருவிழாவில் மோதலில் ஈடுபட்டு இளைஞர் மோகனை தாக்கி விட்டு தப்பிச்சென்ற சின்னத்தோட்டாளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், அதன் மூலம் மோதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Bihar: பிகாரில் 4 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details