திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சின்ன மோட்டூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின பட்டதாரி இளம்பெண், அதே கிராமத்தின் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் விக்னேஷை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், கர்ப்பமடைந்த பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கடந்த 2020ஆம் ஆண்டு விக்னேஷை வற்புறுத்தியுள்ளார். ஆனால், விக்னேஷோ தனது பெற்றோர், உறவினர்கள், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பதால் ஏற்றுகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்பெண் தான் கர்ப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உடனே விக்னேஷ் அப்பெண்ணிடம் தான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரையை குடிக்க வைத்துள்ளார்.
இதனால், கரு கலைந்த நிலையில், இளம்பெண் வீட்டில் உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து, அவரது தந்தை, அவரது உறவினர்கள் ஆகியோர் அப்பெண்ணை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெண், கருகலைப்பு செய்யப்பட்டதால்தான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மகளிடம் விசாரித்ததில் விக்னேஷ் என்ற இளைஞர் தன்னைக் காதலித்து ஏமாற்றியதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், புகார் அளித்து பல நாள்களாகியும் இது குறித்து காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், எட்டு மாதத்திற்கு முன்பு தலைமறைவான விக்னேஷ், நேற்றிரவு (ஜூன்.02) ஊருக்குள் வந்துள்ளார்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு விக்னேஷின் வீட்டின் முன்பு குவிந்து நியாயம் கேட்டனர். அப்போது, விக்னேஷின் உறவினர்கள் அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியேறி விட்டனர்.
தொடர்ந்து, உடனடியாக கிராம மக்கள் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பூட்டிய வீட்டிற்குள் இருந்த விக்னேஷை கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.