திருப்பத்தூர்:கந்திலி ஒன்றியத்திற்குள்பட்ட கும்மிடிக்காம்பட்டி ஊராட்சி அனிகானூர் பகுதியில் வசிப்பவர் திருப்பதி. ஆட்டோ ஓட்டுநரான இவரது மகள் கலையரசி (18). அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துவந்த இவர் தன்னுடைய தம்பி செல்வம் (12), சக நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதனிடையே, தன்னுடைய தம்பி உள்பட சக நண்பர்கள் கிணற்றுக்குள் குதித்து விளையாடும்போது தானும் நீச்சல் அடிக்க வேண்டும் என்கிற ஆர்வ மிகுதியில் எண்ணெய் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்க ஆரம்பித்த கலையரசி நீச்சல் அடிப்பதற்குத் தொந்தரவாக இருப்பதாகக் கருதி எண்ணெய் கேணை கழற்றி எறிந்துவிட்டு நீச்சல் அடித்துள்ளார்.
இந்நிலையில் நீருக்குள் சென்ற கலையரசி மீண்டும் வெளியே வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பி செல்வம் உள்பட சக நண்பர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.